Wednesday, 12 April 2017


வேப்பம்பூ வாசம்


வேப்பம்பூ வாசம்
            மாசி மாதம் நமக்கு வசந்த காலம். ஆனால் வெய்யில் தகிக்கிறது. இது மனிதன் கானகங்களைக்கொன்றதால் ஏற்பட்ட தீமை. இந்த மாதத்தில் மரங்கள் பூக்களை வர்ஷிக்கின்றன, பூக்காத தாவரங்களெல்லாம் தை மாதக்குளிர் முடிந்ததும், ஆதவனின் கரங்களின் சற்றே சூட்டினால் மலர்களை மலர்த்துகின்றன. இந்த வருஷம் அனல் பறக்கும் வெய்யில் இருக்கும் என்பது மாசி ஆரம்பத்திலேயே தெரிகிறது அல்லவா? மரங்களைக்கொன்று ஊர் சமைத்து, தார் சாலை உருவாக்கி, குளங்களைத்தூர்த்து கட்டிடங்களைக்கட்டியதின் விளைவு நமக்கு கண் கூசும் வெய்யில். நீரற்ற கொடுமை. மனிதனை கடவுள் ஏன் படைத்தானோ தெரியவில்லை. எண்ணைச்சட்டியில் இட்டு வறுப்பது போல வெய்யிலின் தாக்கம். இந்த கால கட்டத்தில் பலவித மலர்களை மலர்த்துவது இன்னும் அந்தக்கால வசந்த காலத்தைப்பறை சாற்றுவது போலிருக்கறது என்றே நினைக்கிறேன்.

இவன் வைத்து, இறை அருளால் வளர்ந்த வேப்ப மரங்கள் தகிக்கும் வெய்யிலில் நிழல் தந்து, தனது குறு வெள்ளை மலர்களை மலர்த்தி காற்றில் அசைந்தாடுகின்றன. மக்கள் இவன் வைத்து வளர்த்த மரங்களுக்கு கீழ் கார்களை நிறுத்துகின்றனர். கார் நிறுத்த வீட்டில் இடவசதி இல்லாதவர்கள் ஏன் தான் கார் வாங்குகிறார்களோ! பேராசை யாரை விட்டது? மரங்கள் புத்தம் புது இலைகளைப்போர்த்திக்கொள்ள இலைகளை உதித்துவதை யாரும் கண்டு கொள்வதில்லை. அடியேன் உதிர்ந்த இலைகளை இடுப்பு நோக அள்ளி ஓரிடத்தில் கிடத்தி விடுகிறேன். இவன் விவசாயி இல்லை. மக்கவைத்து உரமாக்கலாம் எனில் அது இவனால் ஆகாத காரியம். காய்ந்த இலை, தலைகளுக்கு நெருப்பு வைக்கலாமெனில் என்னேரமும் சில கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. அவரவர் வசதிகளை பார்த்துக்கொள்கின்றனர். மரம் எப்படி வளர்ந்தது, அதற்கு நாம் என்ன செய்தோம் என்பதை யாரும் லவலேசமும் நினைப்பதில்லை. ஆதாயமனிதன் எதையும் ஆதாயமாக்கிக்கொள்கிறான். எங்கிருந்தோ எல்லாம் புது முகங்கள், புதுப்புதுக்கார்களை இவனையோ, என் பகுதி மக்களையோ சட்டை செய்யாமல் நிறுத்தி விட்டுச்செல்கிறார்கள். வேப்பமரத்தில் தொங்கிச்சிலும்பும் பூக்களை உகாதிப்பண்டிகைக்கு ஸ்கூட்டரின் மீது நின்று தனக்கு உரிமைப்பட்ட மரம் போல பலவந்தமாகப்பறிக்கின்றனர். வேப்பம்பூவாசம் ‘கம்’மென்று மணந்து மூக்கை நிறைக்கிறது. மாலைப்பொழுதிலும், காலைப்பொழுதிலும் வாசனை அப்படியே என்னை மயக்குகிறது. இவன் கையால் வைத்து வளர்த்து, இறை அருளால் ஊக்குவித்த வேம்பு மரங்களின் நன்றியையும், தனது மகிழ்வான சுகந்தத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்கிறது. இதை மற்றைய மக்கள் உணர்கிறார்ளோ எனத்தெரியவில்லை. அதிகாலை என்னை எழுப்புவது கூட வேப்பம்பூ வாசம் தான். இதை எனக்காகவும் என்னுள் உறையும் இறைவனுக்காகவும் எழுதி வைக்கிறேன். மற்றவர் படித்து ரசிக்காவிட்டாலும் இந்த ஆன்மனுக்கு ஏது மில்லை. ஸர்வம் சிவமயம்.

Sunday, 5 March 2017




இலையுதிர் காலம்


இலையுதிர் காலம்
                இலையுதிர் காலம், வசந்தத்திற்கு முகமன் கூறும் காலம். பெரும்பாலான மரங்கள் பழைய சொக்காய்களைக்கழற்றிப்போட்டு விட்டு, புதுச்சொக்காய்களைப்போர்த்திக்கொள்ளும் காலத்தின் அரிகுறி. நம் தலையிலிருந்தும் அவ்வப்போது முடி கொட்டுகிறது. காலனி வாசிகள் இலையுதிர்க்கும் மரங்களைப்பார்த்து முகம் சுழிப்பது அழகல்ல. வாழ்நாளில் நீங்கள் எத்தனை குப்பை போடுகிறீர்கள்! மரம் உதிர்க்கும் இலைகள் மண்ணுக்கு உரம். நீங்கள் போடும் பிளாஸ்டிக் உட்பட அனைத்தும் மண்ணுக்கு உரமாகுமா? மாசி மாதம் இலையுதிர்காலம். தை என்றால் தரையும் நடுங்கும். குளிர் விடும் காலம் மாசி மாதம். மாசிக்கடைசியில் தளிர்கள் விட, வசந்த காலம் ஆரம்பம். ஆம்! பங்குனி காலம் தான் நமக்கு வசந்த காலம். ஆனால் மரங்களை வெட்டித்தள்ளி விட்டபடியால், அது வெய்யில் கொழுத்தும் கோடை காலம் ஆகிப்போயிற்று. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என்னவானதென்றால், வெய்யில், மிக வெய்யில், உக்கரமான வெய்யில் என வெப்பகாலமாகிப்போனது.
நீர் நிலைகள் அழிக்கப்பட்டு பஸ் ஸ்டேண்ட் முதற்கொண்டு கோர்ட் வரை அரசே உதாரணகர்த்தாவாகிப்போய் குளிர்ச்சி குறைய நாமெல்லாம் அக்னி குண்டத்துக்குள் இருப்பது போல பூமியில் வாழ்கிறோம். போதாக்குறைக்கு குளிர் சாதனப்பெட்டி மாட்டி வெளியில் வெப்பத்தை மிகைப்படுத்துகிறோம். மரங்களும், நீர் நிலைகளும் இல்லாமல் போய்,ஜனப்பெருக்கத்தின் சூடு, RCC கட்டிடங்களின் சூடு, வாகனப்பெருக்கம் என ஆகிப்போய் பருவத்திற்கு மழையில்லை. பருவ மழை அற்றுப்போய் விட்டதற்குக்காரணம் மனிதன். கடவுள் மனிதனை ஏன் படைத்தார்?எந்த உயிரும் இயற்கையை மனிதனைப்போல நாசம் செய்வதில்லை. அதுஅதன் நிலையில் உள. மனிதன் கையில் குரங்கு கையில் பூமாலை போல இந்த பூமி அகப்பட்டு, சீரழிந்து கொண்டிருக்கிறது. வெறித்தனமாக பணத்தைக்குவிக்க பூமியைக்கூறு போட்டு விற்கிறான். பூமியை துளைத்தெடுக்கிறான், மணலை அள்ளுகிறான். நீரை மாசு படுத்துகிறான். காற்றை மாசு படுத்துகிறான். குப்பைகளை டன் கணக்கில் விசிறி விடுகிறான். எந்த விலங்கும் தேவைக்கு மேல் பூமியைச் சுரண்டுவதில்லை.
இந்த வருஷம் 1 அல்லது 2 டிகிரி வெப்பம் கூடும் என அறிவிப்பு. அது நிகழ்கிறது. பருவ மழையைத்தொலைத்து விட்டு, எப்போவாது புயல் வரின் மழை வருகிறது. நீருக்கு விலை நிர்ணயித்துவிட்டோம். காற்றுக்கு? எப்போது திருந்தப்போகிறோம். மழையைத்தொலைத்தது போல வசந்தகாலத்தை எப்போதோ தொலைத்து விட்டோம். மாசி கடைசி, பங்குனி மாதங்கள் வசந்தமாக இருந்தது, கோடை காலமாகிப்போனது நமது முட்டாள் தனமான வாழ் முறையால் தான் எனச்சொன்னால் அது மிகையல்ல.

Saturday, 7 January 2017






மாடப்புறாக்கள்
மாடங்களில் வசிக்கும் மாடப்புறாக்கள் பல சமயம் அலுவலக குளிர் சாதனப்பெட்டிகளின் மேலே வசிக்கின்றன. மாட வாசிகள் மாடப்புறாக்களைப் பலர் ரசிப்பதில்லை. அதன் கம்பீர நடையும், கொட்ரு, கொட்ரு ஒலியும், பளபளக்கும் கழுத்தும் யார் பார்த்து ரசிக்கிறார்? எச்சமிடுகிறது! மழைபெய்துவிட்டால் அந்த எச்சத்தோடு கலந்து விட்ட வாசனை குமட்டுகிறதே! எனப்பலர் புறாக்களை விரும்புவதில்லை. சூலூரில் ஒரு கடையில் புறாக்களை கூண்டிலடைத்து விற்பனை செய்யப்படுகிறதைப்பார்த்தேன். அவை உரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றனவா அல்லது வளர்த்தப்பட வாங்கப்படுகின்றனவா எனத்தெரியவில்லை. மனிதன் எதைத்தான் உண்ணவில்லை.?
ராஜஸ்தானில் பல இடங்களில் புறாக்களுக்கு தானியம் இரைக்கின்றனர். புறாக்கள் பறக்கும் அழகும், அதன் கம்பீரமும் மனதை மயக்கும். அவை ஒரு சேரப்பறக்கும் விதம், தானியம் எடுக்க இறங்கும் விதம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அதிகாலை கதிரவன் வழுவாக இருந்தால் அதன் கிரணங்களில் புறாக்கள் பறக்கும் போது ஜ்வலிக்கம் அழகுக்கு ஈடாக எதையும் தரலாம்.எனது மச்சான் தனது நண்பரின் அடுக்கு மாடிக்குடியிருப்பைக்கவனித்தும், அங்கேயே ஒரு குடியிருப்பில் வாழ்ந்தும் வருகிறார்.
ஒரு நாள் ஆதவன் அஸ்தமன நேரத்தில் மச்சான், எனது தம்பி, நான் மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மாடப்புறாக்கள் அங்கு பறந்து வந்து, அமர்ந்தும், நடந்தும், குதித்துக்கொண்டிருந்துமிருந்தன. நான் சூர்ய அஸ்தமனத்தோடு அவற்றை ரசித்துக்கொண்டிருந்தேன். சில இடங்களில் அவற்றின் எச்சங்களிருந்தன. எனது தம்பி ஒரு யோசனை சொன்னது என்னை வியப்பிலும், வெறுப்பிலும் ஆழ்த்தியது. மாடப்புறாக்கள் பயந்து மொட்டை மாடிக்கு வராமலிருக்க, உபயோகித்த CD- க்களை கட்டித்தொங்கவிட்டால் அவை வராமல் தடுக்கலாம் என்றான். மச்சானும் அதை ஆமோதித்தார்.
மாடப்புறாக்களை ஏன் வெறுக்கிறார்கள்?அவைகளை அனுசரித்தால் முட்டை கூட வைத்து குஞ்சு பொரிக்கும். பல நூற்றாண்டுகளாக மனிதனும் புறாக்களும் ஸ்நேகம் என்பது சொல்லித்தெரிவதில்லை. கடிதம் எடுத்தச்செல்ல, போட்டிகள் நடத்த எனப்பிணைப்பு இருந்தது. இப்போது?