Saturday, 7 January 2017






மாடப்புறாக்கள்
மாடங்களில் வசிக்கும் மாடப்புறாக்கள் பல சமயம் அலுவலக குளிர் சாதனப்பெட்டிகளின் மேலே வசிக்கின்றன. மாட வாசிகள் மாடப்புறாக்களைப் பலர் ரசிப்பதில்லை. அதன் கம்பீர நடையும், கொட்ரு, கொட்ரு ஒலியும், பளபளக்கும் கழுத்தும் யார் பார்த்து ரசிக்கிறார்? எச்சமிடுகிறது! மழைபெய்துவிட்டால் அந்த எச்சத்தோடு கலந்து விட்ட வாசனை குமட்டுகிறதே! எனப்பலர் புறாக்களை விரும்புவதில்லை. சூலூரில் ஒரு கடையில் புறாக்களை கூண்டிலடைத்து விற்பனை செய்யப்படுகிறதைப்பார்த்தேன். அவை உரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றனவா அல்லது வளர்த்தப்பட வாங்கப்படுகின்றனவா எனத்தெரியவில்லை. மனிதன் எதைத்தான் உண்ணவில்லை.?
ராஜஸ்தானில் பல இடங்களில் புறாக்களுக்கு தானியம் இரைக்கின்றனர். புறாக்கள் பறக்கும் அழகும், அதன் கம்பீரமும் மனதை மயக்கும். அவை ஒரு சேரப்பறக்கும் விதம், தானியம் எடுக்க இறங்கும் விதம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அதிகாலை கதிரவன் வழுவாக இருந்தால் அதன் கிரணங்களில் புறாக்கள் பறக்கும் போது ஜ்வலிக்கம் அழகுக்கு ஈடாக எதையும் தரலாம்.எனது மச்சான் தனது நண்பரின் அடுக்கு மாடிக்குடியிருப்பைக்கவனித்தும், அங்கேயே ஒரு குடியிருப்பில் வாழ்ந்தும் வருகிறார்.
ஒரு நாள் ஆதவன் அஸ்தமன நேரத்தில் மச்சான், எனது தம்பி, நான் மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மாடப்புறாக்கள் அங்கு பறந்து வந்து, அமர்ந்தும், நடந்தும், குதித்துக்கொண்டிருந்துமிருந்தன. நான் சூர்ய அஸ்தமனத்தோடு அவற்றை ரசித்துக்கொண்டிருந்தேன். சில இடங்களில் அவற்றின் எச்சங்களிருந்தன. எனது தம்பி ஒரு யோசனை சொன்னது என்னை வியப்பிலும், வெறுப்பிலும் ஆழ்த்தியது. மாடப்புறாக்கள் பயந்து மொட்டை மாடிக்கு வராமலிருக்க, உபயோகித்த CD- க்களை கட்டித்தொங்கவிட்டால் அவை வராமல் தடுக்கலாம் என்றான். மச்சானும் அதை ஆமோதித்தார்.
மாடப்புறாக்களை ஏன் வெறுக்கிறார்கள்?அவைகளை அனுசரித்தால் முட்டை கூட வைத்து குஞ்சு பொரிக்கும். பல நூற்றாண்டுகளாக மனிதனும் புறாக்களும் ஸ்நேகம் என்பது சொல்லித்தெரிவதில்லை. கடிதம் எடுத்தச்செல்ல, போட்டிகள் நடத்த எனப்பிணைப்பு இருந்தது. இப்போது?