Saturday, 3 December 2016


சிட்டுக்குருவிகள் அடைதல் (Roosting of Sparrows)

Three Neem Trees wherein House Sparrows Roosting


          சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. செல்போன் கோபுரங்களுக்கும் இந்தக் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் மாலை நேரமானால் என் ஊரான சூலூரில் பஸ் நிறுத்தத்துக்கு வெகு அருகில் உள்ள மூன்று செல் போன் கோபுரங்களுக்கு  பக்கத்தில் உள்ள மூன்று வேப்ப மரங்களில் வந்து அடைகின்றன. எல்லாக்குருவிகளுமே வடக்குப்புற பழைய ஊரிலிருந்து வெகுவேகமாகப்பறந்து வருகின்றன. ஞாபகம் வைத்து வெகு கச்சிதமாக தினம் இரவில் தங்கும் மரத்தை அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒன்றிரண்டு கூட்டமாகவும் பறந்து வந்து மரத்தில் அடைவதற்கு முன்னம் ஜமுக்காளம் போல பஸ் ஸ்டேண்ட் மேல் வானில் ஒரு சேரப்பத்து நிமிஷம் முன்னும் பின்னும் பறந்து பின்பு வேப்ப மரத்தில் அடைகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் ஊரின் தெற்குப்பகுதியில் இருந்து வருவதே இல்லை. தெற்குப்பகுதியில் புதிய RCC வீடுகள், வடக்குப்பகுதியில் ஓட்டு வீடுகள் மற்றும் சந்தை, குறுகலான வீதிகள்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஊர்க்குருவிகளுக்கு உணவு கிடைக்க வழிவகுக்கும் அமைவு ஊரின் வடக்கில் உள்ளது. தெற்கில் எல்லாம் காங்கிரிட் ஜங்கிள் அதாவது மண்ணற்ற சிமெண்ட் வீடுகள்.  ஊர்க்குருவிகளுக்கு, பஸ் ஸ்டேண்ட் போல மக்கள் சந்தடியும் தேவை என நிருபணமாகிறது. சூலூரில் மட்டுமல்ல, உடுமலைப்பேட்டையில் இதே போல பஸ் ஸ்டேண்டில் உள்ள மரங்களில் ஊர்க்குருவி அடைதலைப்பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சியில் ஒரு பழைய பெட்ரோல் பங்க் அருகில் ஐனநடமாட்டம், வண்டிகள் அடிக்கொரு தரம் போகும் சாலையோரம் உள்ள ஒரு குட்டை மரத்தில் அடைவதைப்பார்த்திருக்கிறேன். பொதுவாக இப்போது உருவாகியுள்ள நகரம் ஊர்க்குருவிக்கு நரகம். கூடுகட்ட தாழ்வாரம், கூரைகள், ஓட்டுவீடுகள், பொந்துகள், புழுப்பிடிக்க மண்ணன்டிய கொல்லைப்புறங்கள், முற்றங்கள் இல்லவே இல்லை. சாக்கிலிருந்து சிந்தும் தானியங்களும் இல்லை. ராஜபோகமாக அரிசி உணவில் வாழும் மக்கள் தானியங்களை விரும்பாது போக, ஊர்க்குருவிகளும் மனிதனோடு இப்போதெல்லாம் நேசம் கொண்டாடுவதில்லை. அக்காலங்களில் திண்ணையிலும், வாசலிலிலும் நம்மை வந்து நலம் விசாரிக்காமல் போகாது. கிச்….கிச்..கி..கி….. ஒலி நம்மைவிட்டு தொலைந்து போனது. ஊர்க்குருவி தத்தித்தத்தி வரும் அழகை ரசிக்க இப்போது வாய்ப்பு அறவே இல்லை. நம்முடைய சுகபோக வாழ்க்கையில் எளிமையான பரவசங்களை இழந்து விட்டோம். 

Wednesday, 9 November 2016



புலம் பெயர்ந்த முத்தக்கோணாம் பாளையம்
            இந்த கிராமம் அழிந்து பட்டு விட்டதாக என் மூத்த தோழர் பழனிக்கவுண்டர் சொல்லத்தெரிந்து கொண்டேன். செஞ்சேரி மலை கிராமத்துக்கு மரக்கன்றுகளைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்ற போது சொன்னார். இந்த அழிந்த கிராமம் செலக்கரிச்சல் கிராமத்துக்கும், புளியமரத்துப்பாளையத்துக்கும் இடையே வருகிறது. கிராமம் இருந்ததற்கான எந்த விதத்தடயமும் இல்லை. ஒரே ஒரு கூரையற்ற சின்னக்கோயில், இரண்டடி மண்மேட்டில் தார்சாலையோரமாக இருந்தது. நின்ற கோலத்தில் ஒரு கற்ச்சிலை கண்ணைக்கவர்ந்தது. மரங்களோ, வீடுகள் இருந்ததற்கான தடயங்களோ அறவே இல்லை.
இந்த கிராமத்தைத்தாண்டி இரண்டு கி.மீ பக்கமே உள்ள புளியமரத்துப்பாளையம் ஒரு பெரிய ஆல விரக்ஷத்துடனும், ஒரு கோயிலுடனும் தொடங்கி, கிராமம் உள் வாங்கியிருந்தது. நான் செலக்கரிச்சல் கிராமத்தின் நூலக வளாகத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாக பட்டதாரிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது, புளியமரத்துப்பாளையத்திலிருந்து ஒரு ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண் சைக்கிளிலேயே வந்திருந்தாள். அந்த ஆலமரத்துக்குக்கீழே ஒரு எருமை கட்டப்பட்டு காணப்பட்டது. அங்கு அமர்ந்திருக்க ஒரு மனலயமான அமைதி கிட்டியதை உணர்ந்தேன்.மை போன்ற நிழல், மரத்தண்டு போல விழுதுகள். அங்கும் என் மனதிலும் பேரமைதி நிலவக்கண்டேன்.
முத்தக்கோணாம் பாளையம், யாதவர்கள் அதாவது கோனார்கள் இருந்த கிராமம் எனப் பழனிக்கவுண்டர் சொன்னார். மூத்தக்கோனார் பாளையமாக இருந்தது முத்தக்கோணாம் பாளையமாக மாறியிருக்கும், என்றே நினைக்கிறேன். இவர்கள் தொழில் ஆடு மேய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். மழை வெறுத்து நிற்க மேய்ச்சல் நிலமற்றுப்போக இந்த கிராமத்து மக்கள் வெளியேறியிருக்க வேண்டும்.சொந்த பூமியைவிட்டு எவர் வெளியேறினாலும் கணத்த இதயத்துடன் தானே போவார். இந்தக்கூரையற்ற இரண்டடிமேட்டுக்கோயிலையும், சுற்றியுள்ள அத்துவான கரட்டு வெளியையும் கண்ணுறும் போதே எனக்கே மனதைப்பிசைந்த்து. மனைவி, குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து, சுகித்துப் புரண்ட இடத்தை விட்டு புலம் பெயரும் போது கண்ணீர் கண்களைத்திரையிடத்தானே செய்யும். நீரின்றி உயிர்கள் ஏது?


Wednesday, 26 October 2016




 திருமாண்டகவுண்டன் பாளையம் முத்து


தொரட்டி மரம்

முத்துக்குமாரசாமி


            முத்துக்குமாரசாமி பெயருக்குத்தகுந்த மாதிரி முத்தானவர் தாம். மனித ஆற்றல் செயல் வீரர் பட்டியலில் முன்னதாக உள்ளார். இவரது கிராமத்துக்கு சூலூரிலிருந்து 20.09.2016 அன்று வழியில் உள்ள கிராமமான செலக்கரிச்சலில் வாழும் 86 வயது பழனிக்கவுண்டர் எனும் மரஅன்பரை ஸ்கூட்டரில் பின் புறம் ஏற்றிக்கொண்டேன். இவர் 20 வருஷங்களுக்கு முன்பு அவர் கிராமத்தில் ஆயிரம் மரங்கள் வளர்த்த பெருமை கொண்டவர். புளியமரத்துப்பாளையம், சந்திராபுரம் என தார்ச்சாலையில் வளைந்து, வளைந்து பறக்கும் பறவையைப்போல மேடு, பள்ளமான சாலைகளில் பறந்தோம். காற்றாலைகள் காற்றில் பர்ரு, பர்ரு என ஒலி எழுப்பி சுழன்று கொண்டிருந்தன. ஏமாற்றிப்போன தென்மேற்குப்பருவமழையை சபித்தவாறு காய்ந்துபொறுமிப்போன பூமி, ஆடுகளின் கண்களுக்குக்கூட பசுமை தெரியாத ஒரு வெங்காஞ்ச மண்ணாய்க்கிடந்தது.
 வாய் பிளந்த கண்மாய்கள் மேகம் நீர் ஊற்றுமா என ஏங்கிக்கிடந்தன. சென்ற வழியில் கண்ணில் பட்ட மல்லேகவுண்டன் பாளையம் கிராமம் நீரிருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என எண்ணிக்கொண்டேன். கண்மாயின் மேடுகளில் வரிசையாக நின்ற புளிய மரங்கள், இடது புறம் பெரிய ஊறணி, சிறுவர் பள்ளி, நூலகம் என அமைதியின் இழையில் பின்னப்பட்டதாய் மனதை மகிழ்ச்சி கொள்ளச்செய்தன. வழிதவறி, வடக்கே ஊத்துக்குளி கிராமத்துக்குச்சென்று, அங்கு எங்களுக்கு வழி சொல்லத்தெரியாத தாதா காலத்து ஆலமரத்தைச்சந்தித்தது, சந்தோஷம் கொள்ள வைத்தது.அப்போது மொபட்டில் வந்தவர் வழி சொல்ல, திருமாண்ட கவுண்டன் பாளைத்துக்குள் நுழைந்தோம்.
கிராமத்தின் முகப்பிலேயே ஒரு யுவன் சாலையோர மரக்கன்றுகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தான். வனம் இந்தியா பவுண்டேசன் வழங்கிய டாங்கர் வண்டி நின்றிருக்க, அதிலிருந்து நீர் வார்க்கும் குழாய். கிராமம் என்று கூட சொல்ல முடியாத குக்கிராமம். கண்மாய். கோயில் , கிராமசாலைகள், என எங்கு பார்த்தாலும் மரக்கன்றுகள். பிளாஸ்டிக் வலை ஆடு, மாடு கடிக்காமல் இருக்குமாறு வைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு எதிரில் உள்ள வற்றிய சின்னக்குளத்துக்கரைகளில் பழமையான அரசன், மற்றும் ஆல். மயானத்தில் இனிமேல் தான் மரக்கன்றுகள் வைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை.
குக்கிராமத்தின் வளைவில் ஒரு இச்சி மரம். அங்கிருந்து பார்க்க, ஒரு மதிய வயது ஜோடி இளைப்பாறிக்கொண்டிருந்தது. கோயிலுக்கு இடது புறம் ஒரு முன்னூறு வருஷம் பழமையான தொரட்டி மரம் இருக்க, அதைச்சுற்றி மேடை. தொரட்டி மரத்தின் அழகு என்னைச்சொக்க வைத்தது. ஒரு அழகிய பச்சைச்செண்டு போல இருந்தது. அந்த மேடையில் இரண்டு பெரிசுகள் ஆண், பெண் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். மதிய வேளையல்லவா!  பெரியவரிடம் பேச்சுக்கொடுத்ததில்
திரு. முத்து, கிராமத்துக்கு செய்யும் சேவையை உளமாறப்புகழ்ந்து பேசினார். நாங்கள் போன போது முத்து சார் இல்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இவரது சேவையை அருகாமையிலுள்ள புளியம் பட்டி, மல்லேகவுண்டன் பாளையம் கிராமங்களில் இளைஞர் அமைப்பை ஏற்படுத்தி விரிவு படுத்த உள்ளாராம். வடகிழக்குப்பருவ மழை இறங்கி வந்தால் இவரது ஆற்றல், மரங்கள் வாயிலாக மேலும் மிளிரும்.

Tuesday, 25 October 2016

பறவைகளின் உலகம்

Sunday, October 2, 2016


செஞ்சேரி 


வனம் இந்தியா பவுண்டேசன் உபயத்தில் மரங்களுக்கு நீர்

நூறு நாள் வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களிடையே திரு. நடராஜ் உரை.


செஞ்சேரி
            செஞ்சேரி மலைக்கு இன்னொரு பெயர் மந்திரகிரி. தென்சேரி என்பது செஞ்சேரி என மறுவி விட்டது. மலைமேல் வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். மலைப்பாறைகுன்றில் ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அதில் சிறிது தூரம் போனால் மூச்சடைக்கும். அதற்குமேல் போக முடியாது. இந்த கிராமத்தைச்சுற்றி  திருமூர்த்தி அணைக்கட்டு நீர்க் கால்வாய் வருஷத்துக்கு 35 நாட்களாவது ஓடுவதால் இன்னும் பசுமை அப்பிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் மழையின்னையால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, வாட்டமாகத்தான் உள்ளது. திடீரென ஒரு நாள் வெள்ளிக்கிழமை (2.9.16) செலக்கரிசல் 86 வயதைத்தொட்டும் சுறுசுறுப்பாக வலையவரும் பழனிக்கவுண்டரை என் ஸ்கூட்டர் பின் புறம் அமர வைத்து, அவர் வழிகாட்ட சூலூரிலிருந்து 25 கி. மீ- க்கு அப்பாலுள்ள செஞ்சேரிக்கு பறந்தேன்.
            வழியில் இத்தனை குளம் குட்டைகள் வாயைப்பிளந்து நீருக்காக தவம் கிடக்கின்றனவே என வருத்தமாயிருந்தது. தார் சாலையைத்தவிர நீர் நீச்சல் இல்லாததால் காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. தென்னை மரங்களை மிகுதியாகப்பார்க்கிறேன். வழியில் புளியமரத்துப்பாளையத்தில் நூறு வயதான ஆலமரம் விழுதுகளோடு பார்த்து பரவசம் மேலிட்டது. காய்ந்துபோய் பல வருஷங்களான ஒரு பெரிய குளத்துக்குள் ஒத்தையடிப்பாதையில் போய் தார் சாலையில் இணைந்தோம். எனது மூத்த நண்பர் பழனி இருந்ததால், வழி பிசகாமல் சந்திராபுரம்,  வாரப்பட்டி, முத்தக்கோனாம் பாளையம், சுல்தான் பேட்டை வழி காட்டப்பட்டு செஞ்சேரி அடைந்தோம். நல்ல வேளையாக பாதையோரத்தில் வனம் இந்தியா பவுண்டேசனின் பேருதவியால் நடப்பட்ட மரநாற்றுகளுக்கு நீர் வார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த வனம் இந்தியா ட்ராக்டர் டாங்க் வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தினோம்.
            நூறு நாள் வேலை வாய்ப்பில் பணிபுரியும் முதிய மகளிர் குடங்களில் ட்ராக்டர் டாங்க்கில் நீர் பிடித்து பாதையார நாற்றுகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் சரியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி கொண்டோம். நீர் அருகாமையிலுள்ள கிணறுகளில் ட்ராக்டர் டாங்க்கில் பிடித்து ஊற்றுகிறார்கள். மழைமேகங்கள் ஏன் இப்படி ஏய்க்கின்றன எனத்தெரியவில்லை. கரு மேகங்கள் கூடும் ஆனால் ஒரு சொட்டு மழை தென் மேற்குப்பருவ மழை தராது கஞ்சத்தனமாக இருந்துவிட்டது. மனிதன் ஏய்த்தால், இயற்கையும் ஏய்க்கத்தானே செய்யும். ஐந்து நிமிஷத்தில் இந்தப்புனிதப்பணியை மேற்பார்வையிடும் நடராஜன் அவர்கள் மொபட்டில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த இன்னொரு நண்பர் பொன்னுசாமி என்பவரை செய்ற்குழு உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வைத்தார்.
            அங்கிருந்து செஞ்சேரி –சுல்த்தான் பேட்டை சாலை, பச்சார் பாளையம், செஞ்சேரி மலை, குமாரபாளையம், வடவேடம்பட்டி, அருகம்பாளையம், குறிஞ்சி நகர், செஞ்சேரி மயானம் என செஞ்சேரி மலையை நோக்கிச்செல்லும் கிட்டத்தட்ட எல்லாச்சாலைகளிலும் மரநாற்றுகள் சாலையோரம் நடப்பட்டு, மூங்கில் கூடைகள் ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாப்பாக இருக்க நாற்றுகளைச்சுற்றி வைத்திருந்தனர். காற்றில் அசையாமலிருக்க குச்சி நட்டிருந்தனர். நானாவித மர நாற்றுகளைப்பார்க்க முடிந்தது. மூவாயிரம் நாற்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகச்சொன்னார். 14.9.16-க்குப்பிறகு 35 நாட்கள் திருமூர்த்தி அணைக்கட்டு நீர் கால்வாய்களில் வருவதால் மேலும் மர நாற்றுகள் நட இருப்பதாக நடராஜன் சொன்னார். அண்ணாரது தன்னலமற்ற பணியைப்பாராட்ட வேண்டும். பல உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முன்னின்று செயலாற்றுவது அதுவும் அன்றாடம் நேரம் ஒதுக்கிப்பணிபுரிவது குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது.
            மயானம் காய்ந்து போய் மழையின்மையால் வெப்பம் கொப்பளித்தது. நீர் பற்றாக்குறையிலும் வரிசைக்கிரமமாக நீர் வார்ப்பது சிரமம் தான். தினமும் ட்ராக்டர் டாங்கர் மூலம் தான் மரநாற்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டியுள்ளது. அதனால் வண்டி தினமும் செஞ்சேரி சாலைகளில் சுற்றிச்சுற்றி வலம் வருகிறது. சொட்டு நீர் இட வழியில்லை. பாதையோர நிழலில் வெய்யிலின் மிகையால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நூறு நாள் முதும் பெண்களை ஒரு வேப்பமர நிழலில் நடராஜன் அவர்கள் கையசைத்து வரச்சொல்லித்திரட்டினார். என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசப்பணித்தார். அருகில் பழனிக்கவுண்டர், இருந்தார். முதலில் நடராஜன் அவர்கள் பேசினார். பிறகு நான் பேசினேன்.

            இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிஷ்நாய் இன மக்கள் ராஜஸ்தானிலும், அதற்குப்பிறகு சிப்காட் நிகழ்விலும் குறிப்பாக பெண் மக்கள் மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். கூடி மரத்தண்டைச்சுற்றி கைகோர்த்து நின்று, முதலில் எங்களை சிரசேதம் செய்து கொன்று விட்டு பிறகு மரத்தின் மேல் கை வையுங்கள் என வெட்டப்பட இருந்த  மரங்களைக்காப்பாற்றினர். அந்த எழுச்சி எங்கு போனது? ஆகவே ஆடு, மாடு கடிக்க விடாமல் காப்பாற்றுங்கள். குடிக்கத்தண்ணீர் நாம் உற்பத்தி பண்ண முடியாது. மழையை வருவிக்க மரங்கள் தேவை, என உரையாற்றினேன். சில மாதங்கள் சம்பளம் வரவில்லை என தாக்கீது செய்தனர், மறுநாளே இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் மாண்புமிகு மந்திரிக்கு மின்னஞ்ல் செய்தேன்.