புலம்
பெயர்ந்த முத்தக்கோணாம் பாளையம்
இந்த கிராமம் அழிந்து பட்டு விட்டதாக என்
மூத்த தோழர் பழனிக்கவுண்டர் சொல்லத்தெரிந்து கொண்டேன். செஞ்சேரி மலை கிராமத்துக்கு
மரக்கன்றுகளைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்ற போது சொன்னார். இந்த அழிந்த கிராமம் செலக்கரிச்சல்
கிராமத்துக்கும், புளியமரத்துப்பாளையத்துக்கும் இடையே வருகிறது. கிராமம் இருந்ததற்கான
எந்த விதத்தடயமும் இல்லை. ஒரே ஒரு கூரையற்ற சின்னக்கோயில், இரண்டடி மண்மேட்டில் தார்சாலையோரமாக
இருந்தது. நின்ற கோலத்தில் ஒரு கற்ச்சிலை கண்ணைக்கவர்ந்தது. மரங்களோ, வீடுகள் இருந்ததற்கான
தடயங்களோ அறவே இல்லை.
இந்த
கிராமத்தைத்தாண்டி இரண்டு கி.மீ பக்கமே உள்ள புளியமரத்துப்பாளையம் ஒரு பெரிய ஆல விரக்ஷத்துடனும்,
ஒரு கோயிலுடனும் தொடங்கி, கிராமம் உள் வாங்கியிருந்தது. நான் செலக்கரிச்சல் கிராமத்தின்
நூலக வளாகத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாக பட்டதாரிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது,
புளியமரத்துப்பாளையத்திலிருந்து ஒரு ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண் சைக்கிளிலேயே வந்திருந்தாள்.
அந்த ஆலமரத்துக்குக்கீழே ஒரு எருமை கட்டப்பட்டு காணப்பட்டது. அங்கு அமர்ந்திருக்க ஒரு
மனலயமான அமைதி கிட்டியதை உணர்ந்தேன்.மை போன்ற நிழல், மரத்தண்டு போல விழுதுகள். அங்கும்
என் மனதிலும் பேரமைதி நிலவக்கண்டேன்.
முத்தக்கோணாம்
பாளையம், யாதவர்கள் அதாவது கோனார்கள் இருந்த கிராமம் எனப் பழனிக்கவுண்டர் சொன்னார்.
மூத்தக்கோனார் பாளையமாக இருந்தது முத்தக்கோணாம் பாளையமாக மாறியிருக்கும், என்றே நினைக்கிறேன்.
இவர்கள் தொழில் ஆடு மேய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். மழை வெறுத்து நிற்க மேய்ச்சல்
நிலமற்றுப்போக இந்த கிராமத்து மக்கள் வெளியேறியிருக்க வேண்டும்.சொந்த பூமியைவிட்டு
எவர் வெளியேறினாலும் கணத்த இதயத்துடன் தானே போவார். இந்தக்கூரையற்ற இரண்டடிமேட்டுக்கோயிலையும்,
சுற்றியுள்ள அத்துவான கரட்டு வெளியையும் கண்ணுறும் போதே எனக்கே மனதைப்பிசைந்த்து. மனைவி,
குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து, சுகித்துப் புரண்ட இடத்தை விட்டு புலம் பெயரும் போது
கண்ணீர் கண்களைத்திரையிடத்தானே செய்யும். நீரின்றி உயிர்கள் ஏது?
No comments:
Post a Comment